Post Counts

header ads

வில்வம் மரம் ஏன் வில்வம் புனிதமானது?

 வில்வத்தில் அதிர்வை உணரலாம்.

--------------------------------------------------------------


ஏன், ஒரு இலை மற்றொன்றை விட புனிதமாக இருக்கிறது? இது ஒருவித பாரபட்சமா? 

                 அப்படி பார்த்தால், எல்லாமே மண்ணிலிருந்து தான் வருகிறது. வேப்பம் பழமும், மாம்பழமும் ஒரே மண்ணிலிருந்து வந்தாலும், சுவை வெவ்வேறாக இருக்கிறது அல்லவா? 


ஒரு குறிப்பிட்ட உயிர், ஒரு மண்ணை கையாளும் வழிமுறையும், இன்னொரு உயிர் அதே மண்ணை கையாளும் வழிமுறையும் வெவ்வேறாக இருக்கின்றன. ஒரு புழுவிற்கும், பூச்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கும், மற்றொரு மனிதருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எல்லாமே ஒன்று தான், ஆனால் நாம் அவற்றிலிருந்து புரிந்து கொள்வது வேறுபடுகிறது. 


ஆன்மீகத்தில் இருக்கும்போது...


மக்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு வழியிலும் உதவியை எதிர்பார்க்கிறார்கள், ஏனென்றால் இது யாரும் அறியாத பாதை. 

நம்முடைய கலாச்சாரத்தில், நமக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும், கூர்ந்து கவனித்தும், தியான நிலையில் இருந்தும் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் பூக்களையும், பழங்களையும், இலைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. 


ஏன் வில்வம் புனிதமானது? ஏன் குறிப்பாக வில்வம் புனிதமாகக் கருதப்படுகிறது? 

             எப்போதுமே வில்வம், சிவனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள். அவர் ஒன்றும் அப்படி கருதவில்லை. அது சிவனுக்கு நெருக்கம் என்று சொல்லமுடியாது. அது சிவனுக்கு நெருக்கம் என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால், அந்த வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவன் என்று கருதுவதுடன் இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது. 


வில்வத்தின் அதிர்வுகள்

--------------------------------------------


இது மாதிரி நாம் நிறைய பொருட்களை கண்டுபிடித்து வைத்துள்ளோம். நாம் அவற்றை தான் அர்ப்பணம் செய்கிறோம். ஏனென்றால் அதன் மூலமாகத் தான் நாம், தெய்வீக சக்திகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கும் போது, அதனை அவரிடம் விட்டு செல்வதில்லை. அதனை சிவனுக்கு அர்ப்பணம் செய்தபின், உங்களுடன் எடுத்து செல்கிறீர்கள். ஏனென்றால் வில்வத்திற்கு அந்த அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி, பெருமளவில் இருக்கிறது. நீங்கள் அதை லிங்கத்தின் மேல் வைத்து எடுத்தால், லிங்கத்தின் சக்தி அதிர்வுகள் நீண்டநேரம் அதில் இருக்கும். அதனை உங்களிடமே தக்க வைத்துக் கொள்ளலாம்.  


நீங்கள் இதை செய்து பார்க்கலாம்.

-------------------------------------------------------------


ஒரு வில்வ இலையை அர்ப்பணம் செய்து, உங்கள் சட்டை பையில் உங்களுக்கு மிக அருகில் அதை வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள். உங்களுக்கு, அது உடலளவிலும், மனதளவிலும், ஆரோக்கியத்திலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதே மாதிரி பல பொருட்களை மக்கள் புனிதமாகக் கருதி உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது கடவுளைப் பற்றியது அல்ல. இது உங்களைப் பற்றியதும், நீங்கள் ஏதோ ஒன்றை அடையும் திறன் பற்றியதும் ஆகும்.


சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பேரியக்க சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும்போது அந்த அதிர்வை உணர முடியும். 


சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப் போட்டு பூஜை செய்யும்போது, லிங்கத்தில்

இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ

இலைகள் மீது பதியும். இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும். அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது.


லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும்

வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம்.இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள். அந்த அதிர்வு உங்கள்

உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது. இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.

அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு

முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.


சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது. வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த "பஞ்ச தருக்கள்" என்ற சிறப்பைப் பெற்றது. 


சிவ அடையாளங்களில் பிரசாதமாக வருவது வில்வம் இதை ஏன் நம்முடைய சைவ சிவ நெறியில் முதன்மையானது என்பதை பற்றி இன்று ஆழமாக பகிர்கிறேன்....


விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள். அதாவது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது. உதாரணம் விஸ்வ நாதம் எல்லாவற்றிலும் நிறைந்த நாதம்.

வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள். அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள். நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும்.


வில்வமரம் நெருப்பு அம்சம் (பனி கட்டி) உடையது. இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது.

இதை வேறு விதமாக கவனிக்க வேண்டும்.


சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்

இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும்.

சிவ பெருமான் தொழிலே தவறான செயல்களை அழிப்பது தான்.

நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது. அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல். 

கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும். 


ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனிமலையில் உள்ள வெப்பம். 

சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவபெருமான் மறைமுக நெருப்பு,

சக்தி தேவி வெளி நெருப்பு சிவ பெருமான் உள்ளுக்குள் நெருப்பு.


பனிக்கட்டிகளை கைகளில் வைத்து இருந்தாலும் உள்ளே வெப்பம் உண்டாகும் நெருப்பு கதிர்களை கைகளில் பிடித்து கொண்டால் வெளியே வெப்பம் உண்டாகும்.


சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும் சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுரகிரி மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள். இவர்களை வழிபாடு செய்து விட்டு தான் இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள்.


சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது. முன் நாட்களில் பறித்து கொள்ள வேண்டும். வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம். வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.


எங்கு வில்வமரம் அதிகம் உள்ளதோ அங்கு பனிமலை தன்மைகள் உண்டாகும்.


108 வில்வமரத்தை நட்டு வைத்து அவைகளை வளர்த்தல் சிவ ஆசிகளை எளிமையாக பெறமுடியும். ஒரு நாளைக்கு ஒரு இலை என்று 48 வது நாளில் 48 (எண்ணிக்கை ) இலைகளை உண்ண உடலில் உள்ள அக நோய்கள் நீங்கும் என்று அகத்திய பெருமான் சொல்கிறார்.


மிகுந்த குளிர் தன்மைகளை உடைய பெருமாளான நாராயணர் ஸ்ரீ ரெங்கத்தில் தண்ணீரின் நடுவில் படுத்து இருக்கும் பொழுது வெப்பம் தேவை என வில்வ மரத்தில் அடியில் படுத்து இருக்கிறார். ஆம் நமக்கு, நம் குலத்தை தழைக்க வைக்கும் வில்வமே என்றும் நமக்கு தல விருட்சம் என்று நம்மாழ்வார் சொல்கிறார்..


பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள். இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. 


வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு. வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள். மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். 


மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள். வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன் இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள். வில்வ மரங்கள் கிளை, கிளையாக இடையிடையே முட்களுடன் காணப்படும். இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர். 


எனவேதான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வில்வ தளம் என்பது லட்சம் சொர்ண பூக்களுக்கு சமமானது. சிவனுக்கு வில்வ இலைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் சிலர் வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை செய்வார்கள். அத்தகையவர்களுக்கு சிவபெருமானின் அருள் மிக, மிக எளிதாக கிடைக்கும். அதாவது வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். 


வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார். எனவேதான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது. வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது. 


ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும். இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர். எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள். வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் "சிவமூலிகைகளின் சிகரம்" என்றழைக்கப்படுகிறது. மூன்று இலைகளைக் கொண்ட வில்வ தளத்தை சிலர் தனி தனியாக கிள்ளி பிரித்து விடுவதுண்டு. அப்படி செய்யக்கூடாது. 


மூன்று இலை கொண்ட வில்வ தளத்தை அப்படியே அர்ச்சனை மற்றும் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி வில்வதளத்தை பயன்படுத்தினால்தான், அதில் சேமிக்கப்படும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கும். இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா? ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள். 


அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும். பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும்போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள். வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை. அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் பல கதைகள் உள்ளன. ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்ற வேடனை புலி துரத்தியது. வில்வ மரத்தின் மீது ஏறியவேடன் தூக்கம் வராமல் இருக்க, இலைகளை பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். அது மரத்தடியில் இருந்த லிங்கம் மீது விழுந்தது. விடிந்த பிறகுதான் அவனுக்கு தான் ஏறியது வில்வ மரம் என்று தெரிந்தது. அன்றைய இரவு சிவராத்திரியாகவும் இருந்தது. வேடன் தன்னை அறியாமல் லிங்கம் மீது வில்வ தளங்களை போட்ட காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது. மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வம் சார்த்தி, சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம். 


ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்று உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற தலம் வில்வராண்யம் என்று சிறப்புப் பெற்றது. இத்தகைய சிறப்புடைய வில்வ மரம் திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தல விருட்சமாக உள்ளது. 


வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம். வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும். வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும். வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும். வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு. 


எனவே வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது. தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும். கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது. இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும். 


வீடுகளில் வில்வ மரம்

----------------------------------------


நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பின்வரும் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என சிவ மஹா புராணம் சொல்கிறது.... இன்றும் இலங்கையில் அனைத்து சிங்கள சகோதர்கள் வீட்டிலும் வில்வ மரம் நட்டு செழித்திருப்பதை இன்றும் பார்க்கிறேன்....


வில்வ மரத்தை நட்டு பராமரிப்பதனால்,

(1)அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

(2)ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.

(3)கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

(4)108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

(5)இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

(6)சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும்.

(7) வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

(8)வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.

(9)ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.


இன்றும் வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.


அன்பே சிவம்.

அனைத்தும் சிவம். 

அண்டமும் சிவம்.

வில்வமெல்லாம் சிவம்.


ஓம் நமசிவாய..

Post a Comment

0 Comments