Post Counts

header ads

ஸ்ரீசக்கர பூஜை

*சகல செளபாக்யமும்,செல்வ யோகமும் சேர்க்கும் ஸ்ரீசக்கர பூஜை*

---------------------------------------------------------------------

நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர்.

 இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.


"ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்" என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள்.

குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.


*ஸ்ரீசக்கரத்தின் மகிமை:*

------------------------------------------

மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.


மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்

விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.


மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம்.

சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் "அம்பிகையின் அழகு அலை" என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார்.

ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.

சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம்.

அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .

அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: – சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார்.

மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.

இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம்.

 உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள்.

 மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர்.

 இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடுகின்றனர்.

அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம்.

 அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை "ஸ்ரீசக்கர ராஜ" என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர்.

ஸ்ரீ சக்கரம் அவளுடைய இல்லம். ஸ்ரீ சக்கரம் நான்கு மேல் நோக்கிய கோணங்கள், இவை சிவ சக்கரங்கள் எனப்படும், கீழ் நோக்கிய ஐந்து சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் எனப்படும்.

இந்த ஒன்பது முக்கோணங்களும் இடைவெட்டி மொத்தம் நாற்பத்தி நான்கு முக்கோணங்களை உண்டாக்கும்.

இது நடுவில் உள்ள பிந்து சக்கரத்தினையும் சேர்த்த பகுதியினையும் சேர்த்த எண்ணிக்கையாகும்.

ஒன்பது முக்கோணங்களில் எட்டினை மட்டும் கணக்கெடுத்தால் மிகுதி உள்ள ஒரு முக்கோணம் நிலையானதாக அசைவற்று இருக்கும்.

நிலைப்பண்பு என்பது சிவத்தினுடைய தன்மை, இயக்கம் என்பது சக்தியினுடைய தன்மை.

இந்த சக்கரங்கள் சக்தியின் இயக்கத்தால் லலிதையின் இல்லமாக்கப் பட்டிருகின்றது. ஸ்ரீ சக்கரம் பிரபஞ்ச சக்கரம் எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீ சக்கரத்திற்கும் குண்டலினி பயணிக்கும் ஒன்பது சக்கரங்களினையும் ஒப்பிட முடியும். (ஆறு சக்கரங்கள் + சஹஸ்ராரம்+குல சஹஸ்ரம்+அகுல சஹஸ்ரம்).


ஸ்ரீ சக்கரம் மனித உடலுடனும் ஒப்பிட முடியும். மேல் சக்கரங்கள் நாபிக்கு மேல் உள்ள பகுதிகளையும், கீழ் சக்கரங்கள் நாபிக்கு கீழ் உள்ள பகுதிகளையும் குறிப்பிடும்.

சக்தி கோணம் தோல், இரத்தம், மூளை, சதை, எலும்புகளையும் சிவ கோணங்கள் ஆன்மா பிராணன், தேஜஸ், விந்தினையும் குறிப்பிடுகிறது.

 சக்தி கோணம் பருப்பொருட்களையும் சிவ கோணங்கள் சூஷ்ம பொருட்களையும் குறிப்பிடுகிறது.

இந்த சூஷ்ம ஸ்தூல பொருட்கள் ஒருங்கிணையும் போது உயிர்ப்பு தோன்றுகிறது.

ஐந்து சக்திக்கோணங்களும் ஆகாயம், வளி, அக்னி, நீர், மண் என்ற பஞ்ச பூதங்களை குறிப்பதாகவும், இவற்றின் வேற்றுமை கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், ஞான இந்திரியங்க்களாகவும், தன்மாத்திரைகளாகவும் உருப்பெறுவதையும் குறிக்கும். சிவ கோணங்கள் நான்கும் அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றையும் குறிக்கும்.

பிந்து என்பது உள்ளே காணப்படும் கீழ் நோக்கிய உள்ளே காணக்க்படும் புள்ளியாகும்.

 இந்த பிந்துவே உலக தோற்றத்திற் கெல்லாம் காரணமாக கருதப்படுகிறது. இது சிறிய விதை ஒன்று பெரிய மரத்தினை உண்டாக்குவதை உதாரணமாக கூற முடியும்.

 இந்த பிந்துவைச் சூழ உள்ள பகுதி ஆனந்தத்தினை தருவது, இதனாலேயே சர்வானந்தமயச் சக்கரம் எனப்படுகிறது.

இந்த ஆனந்ததிற்கு காரணம் சிவனும் சக்தியும் இந்த சக்கரத்தில் இணைந்து உன்னார்கள் (நாமம் 999).

இந்த சக்கரம் பிந்துவாக சஹஸ்ராரத்தில் தியானிக்கப்படுகிறது. இங்கு சிவசக்தி ஐக்கியம் மட்டும் தியானிக்கப்படுவதில்லை, ஒருவருடைய இஷ்ட தேவதை, மற்றும் குருவினையும் சஹஸ்ராரத்தில் தியானிக்க முடியும்.

 ஸ்ரீ சக்கரத்தினை வணங்கும் செயன்முறையினை நவாவரண பூஜை என்பார்கள். நவ என்றால் ஒன்பது, ஆவரணம் என்றால் சுற்றுக்கள் எனப்பொருள் படும்.

இந்த பிந்துவினை அடைய முதல் பல தேவதைகளை துதிக்க வேண்டும்.

முதல் ஆவரணத்தில் 28 தேவதைகள், இரண்டாவது ஆவரணத்தில் 16 தேவதைகள்,மூன்றாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், நான்காவது ஆவரணத்தில் 14 தேவதைகள், ஐந்தாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஆறாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஏழாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், எட்டாவது ஆவரணத்தில் 15 தேவிகளும் 04 ஆயுதங்களும் ( நாமாக்கள் 08 -11 வரை), ஒன்பதாவது நடு முக்கோணத்தில் ஐந்து ஐந்து தேவதைகள் ஒவ்வொரு பக்கமாக பதினைந்து திதி நித்தியாக்களும் முக்கோணத்தின் சுற்றில் வணங்கப்படும்.

லலிதாம்பிகை பிந்து ஸ்தானத்தில் வணக்கப்படும். இந்த தேவதைகள் தவிர்ந்து குரு பரம்பரையினரும் இந்த முக்கோணத்தின் மேலே வணங்கப்படுவர்.

 ஸ்ரீ சக்கரமும் மஹா மேருவும் ஒன்றே, மஹா என்றால் பெரிய என்றும்ம் மேரு என்றால் மலை என்றும் பொருள் படும். தேவி மகா மேருவின் உச்சியில் வசிக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாண வடிவமே ஸ்ரீ சக்கரம் எனப்படும்.

ஸ்ரீ சக்கரம் என்பது தட்டையான வடிவம், பிந்து புள்ளியாக குறிக்கப்படும், மஹாமேருவில் பிந்து உச்சியில் காணப்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் பெண்கள் செய்ய வேண்டிய பூஜை (ஆண்களும் செய்யலாம் ) இதற்கு மிஞ்சும் யந்திரம் வேறில்லை. முறையான யந்திரத்தை குரு மூலமாக வாங்கி பூஜிப்பவர்க்கு அளப்பரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும்.

ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும்.

பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும்.

பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம்.

பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.

பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும்.

ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும்.

அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்ததாக,

தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா

யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத்

தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:

என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும்.

சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத

பாசாங்குசபுஷ்பபாணசாபாம்

அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்

மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே

சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி

ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே

ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.

சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே

ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே – என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க.

(ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)

ஓம் ஹ்ருதய தேவ்யை நம;

ஓம் சிரோ தேவ்யை நம:

ஓம் சிகா தேவ்யை நம:

ஓம் கவச தேவ்யை நம:

ஓம் நேத்ர தேவ்யை நம:

ஓம் அஸ்திர தேவ்யை நம:

ஓம் காமேஸ்வர்யை நம:

ஓம் பகமாலியை நம:

ஓம் நித்யக்லின்னாயை நம:

ஓம் பேருண்டாயை நம:

ஓம் வன்னிவாசின்யை நம:

ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:

ஓம் சிவதூத்யை நம:

ஓம் த்வரிதாயை நம:

ஓம் குலசுந்தர்யை நம:

ஓம் நித்யாயை நம:

ஓம் நீல பாதகாயை நம:

ஓம் விஜயாயை நம:

ஓம் சர்வ மங்களாயை நம:

ஓம் ஜ்வாலாமாலின்யை நம:

ஓம் சித்ராயை நம:

ஓம் லலிதா மகாநித்யாயை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா

மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:

நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி

என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.

ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.

"ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:

ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்"

(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).

மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.

*ஓம் சக்தி சிவசக்தி ஸர்வ சக்தி ஓம் ஓம்.*


Post a Comment

0 Comments