Post Counts

header ads

City life is false

'நகர வாழ்க்கையே பொய்யானது..!' - காரணம் சொல்லும் 'ஆடுகளம்' கிஷோர்! - Article Source
Vikatan EMagazine all credits - ஜெயக்குமார் & ப.சரவணகுமார்..

பத்தாயிரம் வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், ஆயிரக்கணக்கான சிறுதானிய ரகங்கள், லட்சக்கணக்கான மூலிகை வகைகள் என்று இந்தியாவின் இயற்கை செல்வங்கள் பெரியது. பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதெல்லாம் தலைகீழ்.

உணவு உற்பத்திக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. நம் நாட்டின் சாண, இலை தழை உரங்களுக்கு பதிலாக, ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி உற்பத்தி பெருக்கம் நடந்தது. இதன் விளைவு கேன்சர், நீரிழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் சாதாரண நோய்களாகி விட்டன. பசுமை புரட்சியின் தழும்புகளே இன்னும் மறையவில்லை.

தற்போது விவசாயிகளை குபேரன்களாக்கும் மரபணு மாற்று விதைகளை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மரபணு மாற்று பருத்தி விதைகள் அறிமுகப்படுத்தபட்டதில் விதர்பா பகுதியில் நடந்த விவசாயிகளின் தற்கொலைகளை நாடே அறியும். அடுத்து உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரி உள்ளிட்ட 14 வகையான பயிர்களுக்கும் மரபணு மாற்று விதைகள் கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு அரசுகளும் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. சென்னை, தி.நகர் தக்கர்பாபா வித்யாலயாவில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. இதில் ஒரு அங்கமாக மான்சாண்டோ விதைகளுக்கு எதிராகவும், பாரம்பரிய விதைகளை போற்றும் விதமாகவும் சிறப்பு பேச்சரங்கமும், கண்காட்சியும், உணவு திருவிழாவும் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய நடிகர் ‘ஆடுகளம்’ கிஷோர், "நாம் எதுக்காக உழைக்கிறோம். நம்ம குழந்தைகளுக்காகவும், சாப்பாட்டுக்காகவும்தான். அந்த சாப்பாடு ஏன் நல்ல உணவாக இருக்கக் கூடாது. நிலைத்த நீடித்த உணவு பழக்கங்களை நாம் கைகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சின்ன விவசாயிகள் ஒன்றுகூடி நம்மோட பாரம்பரிய விதைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது" என்று பேசி, மேடையிலிருந்து இறங்கியவரிடம் இயற்கை விவசாயம் குறித்து பேசினோம்.

மிகுந்த ஆர்வமாக அவர் நமக்கு அளித்த பேட்டி இங்கே...
மான்சாண்டோ நிறுவனத்துக்கு ஏன் இவ்ளோ எதிர்ப்பு காட்டுறீங்க?

வியட்நாம் போர் நடந்துட்டு இருந்தபோது, 'ஏஜெண்ட்-ஆரஞ்சு' என்ற பேர்ல அமெரிக்க போர் விமானங்கள் மூலமா பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் வடக்கு வியட்நாமில் உள்ள வனங்கள், விவசாய நிலங்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது பயன்படுத்தப்பட்ட களைக்கொல்லிகளோட அளவு 4.9 மில்லியன் காலன். இதை 4.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் மீது தெளிச்சு அழிச்சாங்க. இன்னைக்கும் இதோட பாதிப்பு வியட்நாம் மக்களை கேன்சர், கருக்கலைதல், உடல் ஊனம் என்று பாதித்து வருகிறது. இதற்கான மருந்துகளை தயார் செய்து கொடுத்தது மான்சாண்டோ நிறுவனம். அதில் மீந்துபோன மருந்துகளை உலகத்துக்கே விற்பனை செய்தது. அப்படிப்பட்ட நிறுவனம் இப்போது இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை விற்க இறங்கியிருக்கிறது.
எதனால் மரபணு மாற்று விதைகள் வேண்டாம் என்கிறீர்கள்?

ஜி.எம். சீட்ஸ் (மரபணு மாற்று விதைகள்) மண்ணுக்கும் நல்லதல்ல. அதை உண்போரின் உடலுக்கும் நல்லதல்ல. விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் வருமானமில்லை. பிறகெதற்கு அதை கொண்டுவர வேண்டும். அதிக பூச்சிக்கொல்லிகள் தெளித்து உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. பூச்சிக்கொல்லி தெளிக்கிறவங்களுக்கும் நோய் வருகிறது. சாப்பிடுறவங்களுக்கும் நோய் வருகிறது. நோய் வந்தால் பெரும் முதலாளிகள் நடத்துகிற மருத்துவமனைக்குத்தான் செல்கிறோம். அவர்கள் தயாரிக்கிற மருந்துகளைத்தான் பயன்படுத்துகிறோம். இப்படி எங்கே சென்றாலும் அவர்களுக்குத்தான் லாபம்.

மரபணு மாற்று பருத்தி விதைகள்தான் ஏற்கெனவே பயிரிடப்பட்டு வருகிறதே?

ஆமாம். கர்நாடக-மகாராஷ்ட்ரா எல்லைப் பகுதியில் அரேமல நாடு என்ற பகுதி, அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பல்லுயிர்கள் வாழும் பகுதி. இன்று அந்த பகுதியில் பருத்தி, மக்காச்சோளம்தான் முக்கிய பயிராக இருந்து வருகிறது. ஆனால், பல தாவரங்கள், பூச்சியினங்கள் அந்த பகுதிகளில் இன்று இல்லை. அதற்கு காரணம் தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் (மோனோ கிராப்ஸ்) பயிரிடப்படுதல், பூச்சிக்கொல்லி தெளித்தலேயாகும். இந்த நிலையில், மரபணு மாற்று பயிர்கள் கொண்டு வரப்பட்டால், நாடு முழுவதும் ஒரே வகையான பயிர்கள்தான் இருக்கும். நாட்டின் பல்லுயிர் தன்மை அழியும்.

வெளிநாட்டு விதைகள் விவசாயிகளை கடனாளி ஆக்குமா?

நிச்சயமாக... முன்பெல்லாம் நம்மிடமே பாரம்பரிய விதைகள், நாட்டு மாடுகள் இருந்தது. விதைகள் முதற்கொண்டு எதையும் வெளியில் வாங்கமாட்டோம். ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் கலாச்சாரம் இருந்தது. கம்பெனி விதைகள் வந்தபிறகு எல்லாம் முடிந்து போய்விட்டது. அடுத்து அறிமுகப்படுத்தபோகும் மான்சாண்டோ விதைகளை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு முறை பயிர் செய்யும்போதும், அவர்களிடம் வாங்கியாக வேண்டும். இது ஒரு கேப்டலிஸ்ட்டாக மாறிவிடும். நமது உரிமையை தாரை வார்ப்பது போன்றுதான் இது.

இதையெல்லாம் தடுக்க அரசுகளால் முடியாதா?

நம்மை ஆள்வோருக்கு இந்த விஷயங்கள் குறித்தான அறிவு குறைவு. மக்களுக்கு எது நல்லதுன்னு அவங்க யோசிக்கமாட்டாங்க. இன்னும் 40 சதவிகிதம் மக்கள் நகரங்களை தேடி வர வாய்ப்பிருக்குன்னு சொல்லி, அதற்கான வேலைகள நகரங்கள்ல செஞ்சிட்டு இருக்காங்க. அதே 40 சதவிகிதம் மக்களுக்கு அவங்க இருக்கிற இடங்கள்லே வேலைவாய்ப்பை உருவாக்க முடியாதா என்ன? எதுக்கு மக்களை நகரங்களை நோக்கி அழைச்சிட்டு வரணும்? இதுதான் மக்களை பத்தி அவங்க நினைக்கிறது.

ஏன் மக்கள் நகரத்தை நோக்கி வரக்கூடாது என்கிறீர்களா?

நகர வாழ்க்கை என்பதே பொய். இங்கே சந்தோஷமா வாழ்றதா நினைச்சுக்கிட்டு, எல்லோரும் வாழ்ந்துட்டு இருக்காங்க. தேவையில்லாத உணவு பழக்கங்கள் மக்களை சீரழிச்சிட்டு இருக்கு. நகரங்கள்ல எல்லாத்துக்கும் மத்தவங்கள நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முடிவாக என்ன சொல்ல வர்றீங்க?

நாம உழைப்பது, சம்பாதிப்பது எல்லாம் நம்முடைய உணவுக்காகவும், சந்ததிகளுக்காகத்தான். அவங்க நல்லா இருக்கணுங்கறதுக்காகத்தான் இவ்வளவையும் செய்றோம். அது ஏன் நல்லதா இருக்கக்கூடாது. நல்ல உணவு, நல்ல பழக்க வழக்கங்களாக இருக்கக்கூடாது. மேற்கத்திய உணவுகளையும், கலாச்சாரத்தையும் கத்துக் கொடுக்கிறதால யாருக்கு லாபம்? அந்த கேப்பிட்டலிஸ்டுக்குத்தானே.
உங்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு காரணம்?

விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். நகரத்தில் குடியேறிவிட்டாலும், விவசாயத்தின் மீது ஆர்வம் இருக்கும். என் அம்மா வழி தாத்தா விவசாயத்தை பத்தி நிறைய சொல்லிக் கொடுத்திருக்காரு. பிறகு முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பிறகும்கூட பண்ணை வைக்கிறதுக்கு முயற்சி செஞ்சேன். இப்போது நிலம் வாங்கி என்னோட தேவைக்கு விவசாயம் செஞ்சிட்டு வர்றேன்.

பண்ணையில் என்ன மாதிரி விவசாயம் செஞ்சிட்டு வர்றீங்க?

பெங்களூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் பண்ணை இருக்கு. இப்போது பழச் செடிகள், எள் இருக்கு. ராகி, தினை, கம்பு, சோளம் போன்ற பயிர்களை பயிர் செஞ்சிட்டு வர்றோம். ‘பேக் பப்பல்லோ’ என்ற அமைப்பின் மூலமா சுமார் 25 சிறு விவசாயிகளை இணைச்சு விளைபொருட்களை பெங்களூரு சிட்டியில் விற்பனை செஞ்சிட்டு வர்றோம். பண்ணை சார்ந்த வேலைகளை மனைவி பாத்துக்கிறாங்க.

அதென்ன பேக் பப்பல்லோ?

"கிராமத்துல பாத்தீங்கன்னா நிறைய பேரு எருமை மேல உக்காந்துட்டு குஷியா போவாங்க. அதுவொரு சந்தோஷமான தருணம்கூட. எருமைன்னு சொன்னாலே கிராமம், விவசாயம் பற்றிய நினைவுகள கொண்டு வந்துடும். அதுக்காகத்தான் இந்த பேரு.

இயற்கை விவசாயம், கர்நாடகா, தமிழ்நாடு எங்கு சிறப்பாக இருக்குது?

தமிழ்நாடுதான். ஏன்னா, இங்க நம்மாழ்வாரோட பங்களிப்பு அதிகமா இருந்ததால, எல்லோருக்கும் இயற்கை விவசாயம்னா என்னான்னு தெரியுது. அங்க வட கர்நாடாகாவுல அதிகமாக இருக்கு. ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர் ஆகியோரது பங்களிப்புகளால் படிப்படியா மாற்றங்கள் நடந்துட்டு வருது.

தற்போதே பாரம்பரிய ரகங்கள் அரிதாகத்தானே இருக்கு?

பெங்களூரு ஏர்போர்ட் பக்கத்துல நர்சரி நடத்திட்டு இருக்கிறவரு, பப்ளிமாஸ் கன்றுகள வித்துட்டு இருந்தாரு. நாங்க வாங்கி விளைவித்து சாப்பிட்டு இருக்கோம். இப்போ அவர் ஆப்பிள் கன்றுகள விற்பனை செய்றாரு. ஆப்பிள் கன்றுகள் சில பகுதிகள்லதான் விளையும். இருந்தாலும் விக்கிறாரு. நாம வெளியிலிருந்து புதுசா வர்ற எதையும் சீக்கிரத்துல ஏத்துக்க பழகிட்டோம். ஏன்னா, நம்மோட கல்விமுறை அப்படி. கியூபாவுல அவங்களுக்கு தேவையான காய்கறிகள மாடித்தோட்டங்கள்லேயே உற்பத்தி செஞ்சுக்கிறாங்க. இங்கேயும் நம் பாரம்பரிய விதைகளை மாடித் தோட்டங்கள்ல வளர்த்து நம்மோட விதைகளை பாதுகாக்கலாம். நம்மோட காய்கறி தேவைகளையும் நிறைவு செஞ்சுக்கலாம். விஷமில்லாத காய்கறிகளயும் உற்பத்தி செய்யலாம். ஆரோக்கியமான சூழலும் வீட்டில் இருக்கும்.

Post a Comment

0 Comments